டிரோன் கேமரா மூலம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட இந்த சம்பவம் குற்றவாளிகள் இடையே அச்சத்தையும், பொதுமக்களிடையே மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோத மதுபான தயாரிப்பை தடுக்கும் வகையில் மாவட்ட போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக எருக்கம்பட்டு, மொழிபட்டு, தாழ்பட்டு, வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்கவிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.
இதுதவிர கல்வராயன் மலையின் அடர்ந்த வனப்பகுதிகள், மலைப்பாதைகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் சென்றடைய முடியாத தொலைதூரப் பகுதிகளிலும் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
அப்போது கள்ளச்சாராய ஊரல்கள் அமைக்கப்பட்டுள்ளதா? கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் ஏற்கனவே கள்ளச்சாராய வியாபாரம் செய்து கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் திருந்தி வாழ்கிறார்களா? வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்தும் அவர்களது வீடுகளுக்கே சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் மலைப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தவும், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொதுமக்களின் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் கேமரா மூலம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட இந்த சம்பவம் குற்றவாளிகள் இடையே அச்சத்தையும், பொதுமக்களிடையே மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.