குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் வேடமணிந்து ஊர் சுற்றி காணிக்கை வசூல் செய்கின்றனர். திருவிழா பாதுகாப்பிற்காக டிரோன் மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டு தசரா பெரும் திருவிழா கடந்த 23ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்சிகள் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். விதவிதமாக வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக வீதி வீதியாக சென்று வசூல் செய்துவருகின்றனர். சாதி, மதம் பார்காமல் அனைத்து தரப்பு மக்களும் தசரா வேடங்களுக்கு காணிக்கை வைக்கின்றனர். அம்மன் பெயரில்வசூல் செய்த பணத்தை 10ம் திருநாள் அன்று பக்தர்கள் காணிக்கையாக கோவிலில் கொண்டு சேர்பார்கள்.
தசரா திருவிழாவிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, முத்தாரம்மன் திருக்கோவில் மற்றும் திருக்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி டிரோன் கேமரா பறக்கவிடும் பட்சத்தில் டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டு பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும் திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் கேமரா மூலம் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் மற்றும் வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்கும் பட்சத்தில் செல்போன் அல்லது வீடியோ கேமரா பறிமுதல் செய்யப்பட்டு ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும் என திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.