தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலியால் டிரைவர் பலி-பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

டிரைவர் மார்ட்டினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஒடியபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீதும், 2 மோட்டார்சைக்கிள்கள் மீதும் மோதியது. ஆட்டோ கவிழ்ந்து அதனை ஓட்டிச் சென்ற டிரைவர் மீது ஏறி இறங்கியது.

கோவை மாவட்டம் பாலத்துறையில் இருந்து உக்கடம் நோக்கி இன்று காலை 11 மணி அளவில் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது.

பஸ்சை சிங்காநல்லூரைச் சேர்ந்த மார்ட்டின் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். பரமேஸ்வரன் (46) கண்டக்டராக பணியாற்றினார்.

காலை நேரம் என்பதால் பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பாலக்காடு மெயின் ரோட்டில் குனியமுத்தூரை கடந்து சுண்ணாம்பு காளவாய் பகுதியில் அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் மார்ட்டினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.

நெஞ்சுவலி

நெஞ்சுவலியுடன் பஸ்சை நிறுத்த மார்ட்டின் போராடினார். இதைப்பார்த்து கண்டக்டரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கண்டக்டர் பரமேஸ்வரன், டிரைவர் சீட்டை நோக்கி ஓடினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பிரேக்கை பிடித்து நிறுத்தினார். அதற்குள் டிரைவர் மார்ட்டின், இருக்கையிலேயே இறந்து ஸ்டியரிங்கில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார்.

ஆட்டோ டிரைவர் பலி

இதற்கிடையே கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஒடியபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீதும், 2 மோட்டார்சைக்கிள்கள் மீதும் மோதியது. ஆட்டோ கவிழ்ந்து அதனை ஓட்டிச் சென்ற டிரைவர் மீது ஏறி இறங்கியது. இதில் ஆட்டோ டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

போலீசார்

விசாரணையில் ஆட்டோ டிரைவரின் பெயர் நூர்மு கம்மது (51) என்பதும், குனிய முத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற காளவாய் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (46) என்பவர் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நெஞ்சு வலியால் இறந்த பஸ் டிரைவர் மற்றும் விபத்தில் பலியான ஆட்டோ டிரைவர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பாலக்காடு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் கண்டக்டர் விரைந்து செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT