தமிழக செய்திகள்

பாட்டியை கொடூரமாக அடித்துக்கொன்ற டிரைவர் - வீட்டை எழுதித்தர மறுத்ததால் ஆத்திரம்

சதீஷ்குமார் தனது பாட்டி இன்பமுத்துவின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது நன்றிகுழியில் அரை சென்ட்டில் அமைந்துள்ள பழைய வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டு வந்துள்ளார்.

குமரி மாவட்டத்தில், வீட்டை பெயருக்கு எழுத மறுத்ததால் 78 வயது பாட்டியை கொடூரமாக தாக்கி கொன்ற பேரன் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நன்றிகுழி கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி இன்பமுத்து(வயது78). இவர்களது மகள் மல்லிகா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சதீஷ்குமார் (29) டிரைவராக உள்ளார். இவர் நன்றிகுழி கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார்.

கொடூர தாக்குதல்

சதீஷ்குமார் தனது பாட்டி இன்பமுத்துவின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது நன்றிகுழியில் அரை சென்ட்டில் அமைந்துள்ள பழைய வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டு வந்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பாட்டியிடம் சதீஷ்குமார் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பாட்டி இன்பமுத்து வீட்டிற்கு சதீஷ்குமார் சென்றிருக்கிறார். அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். காலால் மிதித்தது மட்டுமின்றி, தலைகீழாக தூக்கி சிமெண்ட் தரையில் அடித்தார். இதில் இன்பமுத்து படுகாயம் அடைந்து வலியால் துடித்தார்.

உயிரிழப்பு

இதையடுத்து சதீஷ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். ​இது குறித்து தகவல் அறிந்த இன்பமுத்துவின் மகன் சுந்தர்ராஜ் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் படுகாயமடைந்து கிடந்த இன்பமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்பமுத்து இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் சுந்தர்ராஜ் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

பேரன் கைது

இன்பமுத்துவை கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற பேரன் சதீஷ்குமாரை கைது செய்தனர். வீட்டை எழுதிக்கேட்டு தகராறு செய்து வந்த நிலையில் இன்பமுத்து கொலை செய்யப்பட்டிருப்பதால், அந்த காரணத்துக்காகவே சதீஷ்குமார் தனது பாட்டியை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கொலைக்கு அது தான் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாட்டியை கொடூரமான முறையில் பேரன் அடித்து கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT