பெருங்குடி மண்டலம்- கொட்டிவாக்கம், கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாயில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்த குறைபாடு தவிர்க்கப்பட்டு அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் வினியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரை அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களின் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்னோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட எம்.கே.பி. நகர், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பஸ் நிலையம், முகப்பேர், அண்ணா நகர் மண்டலத்துக்குட்பட்ட சூளைமேடு, தேனாம்பேட்டை மண்டலம்-வள்ளுவர் கோட்டம், கிரீம்ஸ் ரோடு டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் மண்டலம்- எம்.ஜி.ஆர்.நகர், அடையாறு மண்டலம்- தரமணி, பெருங்குடி மண்டலம்- கொட்டிவாக்கம், கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாயில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
34 மின்மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாறு மண்டலத்தில் மட்டும் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 குடிநீர் உறிஞ்சும் மின் மாட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 89 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டா்களை பயன்படுத்தக் கூடாது எனவும் மீறுவோரின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது.