தமிழக செய்திகள்

வரைவு வாக்காளர் பட்டியல்: முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்!

சென்னையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 1.1.2027-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல்

சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்டார். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

சிறப்பு சுருக்கத் திருத்த முறைக்கு பின்பு சென்னையில் மொத்த வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:-

29 லட்சம் வாக்காளர்கள்

சென்னையில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை-4,071. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை-14,04,968. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை-15,09,040. மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை- 900. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை-29,14,908

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் 1.1.2027 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்

இது தொடர்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 21.11.2026 (சனிக்கிழமை), 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுடைய வாக்காளர்கள், 1.1.2027 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது நிறைவடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இறுதி பட்டியல்

வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 4.1.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்டு சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது:-

சிறப்பு சுருக்கத் திருத்த முறைக்கு பிறகு சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 14 ஆயிரத்து 908 ஆகும். சென்னையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகும்.

பெரம்பூர் தொகுதியில் அதிகம் பேர்

சிறப்பு சுருக்க திருத்த முறைக்கு முன்பு 4,079 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 4,071 வாக்குச்சாவடிகளாக குறைந்துள்ளன.

குறைந்த வாக்காளர் உள்ள தொகுதியாக துறைமுகம் தொகுதியும், அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக பெரம்பூர் தொகுதியும் இடம்பெற்று உள்ளன. மேலும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

சிறப்பு சுருக்க திருத்த முறைக்கு பின்பு 21,403 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

பா.ஜ.க. எதிர்ப்பு

வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இந்த வரைவு வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர் அடிப்படையில் வெளியிடப்படுகிறதா அல்லது சாதாரண முறையில் வெளியிடப்படுகிறதா என்பதை விளக்க வேண்டும்’ என்றார்.

தி.மு.க. சட்டத் துறையை சேர்ந்த சந்துருவும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சமீரன் அவர்களை சமாதானப்படுத்தினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. விருகை வி.என். ரவி, இந்திய கம்யூனிஸ்ட் வெங்கடேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கார்த்திக், தேமுதிக முருகன், ஆம் ஆத்மி நடராஜ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT