தமிழக செய்திகள்

இரட்டை கொலை விவகாரம்: நாங்குநேரி அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

வாக்குச்சாவடியை மாற்றியதற்கு கிராம மக்கள் சுமார் 45 பேர் கருப்பு கொடியுடன் தேர்தலை புறக்கணித்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் குறித்து நீதி கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆறுதல் கூறி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கலெக்டர் தரப்பில் எந்த பதிலும் வராததால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கிராமத்தில் பேனர்கள் வைத்து கருப்பு கொடி கட்டப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பேனர்களையும், கருப்பு கொடிகளையும் தேர்தல் ஆணையம் அப்புறப்படுத்தி, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்தது. நேற்று காலையில் தேர்தல் தொடங்கியது. அங்குள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள், துணை ராணுவப்படை, போலீசார் இருந்தனர்.

இந்த நிலையில் பெரும்பத்து கிராமத்தில் 471 ஆண்கள், 498 பெண்கள் என மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 பேர் மட்டுமே ஓட்டுப்போட்டு உள்ளனர். வாக்காளர்கள் வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோன்று, காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னையை அடுத்த பாலேகுப்பம் காலனியில் இருந்து வாக்குச்சாவடி மையம் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஓட்டுப்போட மறுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்தைக்கு பின்னர் வாக்களித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கம்பூதிநாயக் கன்பட்டியில் வாக்குச்சாவடியை மாற்றியதற்கு கிராம மக்கள் சுமார் 45 பேர் கருப்பு கொடியுடன் தேர்தலை புறக்கணித்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நல்ல தங்காள் கோவிலில் சிலை வைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் வாக்களிக்க மக்கள் மறுத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பின் உடன்பாடு ஏற்பட்டது.