தமிழக செய்திகள்

மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்

ஞானப்பிரகாசத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர்.

ஞானப்பிரகாசத்தின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கெட்னமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 39). விவசாயி. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஷேமலதா, புனிதா என்ற 2 மகள்களும் கிஷோர் என்ற மகனும் உள்ளனர்.

ஞானப்பிரகாசம் சிறுநீரகக் கோளாறு காரணமாக செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலக்குறைவு

கடந்த 12-ந்தேதி ஞானப்பிரகாசத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞானப்பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது ஞானப்பிரகாசத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

இதைத்தொடர்ந்து ஞானப்பிரகாசத்தின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி முதல்வர் அரவிந்த் கூறும்போது, “இந்த உடல் உறுப்பு தானம் உறுப்புக்காகக் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் நோயாளிக்கு, மறுவாழ்வுக்கான வாய்ப்பை வழங்குகிறது. தங்களது குடும்பத்தின் பேரிழப்பிலும், மற்றொரு உயிரைக்காப்பாற்ற முன் வந்த உடல் உறுப்புகள் தானம் மனிதநேயத்தின் உன்னதமான வெளிப்பாடாகும். இது மனிதத்தைத் தாண்டிய புனிதமான தியாகம்.

குடும்பம்

உடல் உறுப்பு தானம் என்பது உடல் உறுப்புகளை வழங்குவது மட்டுமல்ல. ஒருவரின் வாழ்வின் மூலம் மற்றொருவரின் வாழ்க்கை தொடர வழிவகுப்பதாகும். ஒரு குடும்பத்தின் கண்ணீரில் இருந்து, பல குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும் நம்பிக்கை பிறக்கிறது. இதுவே உடல் உறுப்பு தானத்தின் மகத்துவம்”என்றார்.

SCROLL FOR NEXT