சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ், வணிக சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
ஈரான்- அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போர் தொடங்கியது முதல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
அதன்படி, இந்த மாதத்தின் முதல் தேதியில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.46 அதிகரித்து ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த மார்ச் 7-ந் தேதி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது.
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.29 உயர்ந்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் 14.2 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.913-ல் இருந்து ரூ.942 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 29 உயர்ந்து ரூ.928.50 லிருந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.