திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
நேற்று CBSE பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்று காலையில் அதற்கு என்னுடைய விரிவான கண்டனத்தை நான் பதிவிட்டிருக்கிறேன். கடிதமும் அனுப்பி வைத்திருக்கிறேன்.
நாம் அமைதியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்க ஏதாவது செய்து, தமிழ்நாட்டில் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்ளும் வேலையை பா.ஜ.க. அரசு சிறப்பாக செய்கிறார்கள்.
அதில் இப்போது, லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா?
அதற்கு, ஒன்றிய கல்வி அமைச்சர் மிஸ்டர் தர்மேந்திர பிரதான், நான் போட்ட செய்திக்கு (ட்வீட்) என்ன ரியாக்ட் செய்திருக்கிறார் தெரியுமா? "தமிழ்நாட்டில் கல்வித் தரம் வளர விடாமல் நாம் தடுக்கிறோம்" என்று பேசியிருக்கிறார். நான் கேட்கிறேன், இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்வதற்கும் - கல்வித் தரத்துக்கும் என்ன சம்பந்தம்?
அதுமட்டுமல்ல, ஏற்கனவே இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்று நமக்கான கல்வி நிதியை இன்று வரை விடுவிக்காமல் இருப்பவர்தான் இந்த தர்மேந்திர பிரதான்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எனும் இந்திக் கொள்கையை உள்ளே விடவில்லை என்ற காரணத்திற்காகவே, "தமிழர்களை நாகரிகம் இல்லாதவர்கள்" என நாவடக்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பேசி, அதற்கு பிறகு மன்னிப்பு கேட்டவர்தான் இந்த பிரதான்.
நான் அவருக்கும்- பிரதமர் மோடி அவர்களுக்கும்- அமித் ஷா அவர்களுக்கும், ஒரு 'ஓப்பன் சேலஞ்ச்' செய்கிறேன். தமிழ்நாட்டுக்கு நீங்கள் பிரசாரத்துக்கு வரும்போது, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி, பிரசாரம் செய்யும் தைரியம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா? வாருங்கள், வந்து பேசுங்கள் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அவர்களே... உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் ஒருவேளை இருந்தால், கட்சிக்கொடியில அண்ணா படம் வைத்திருக்கிறீர்களே... இருமொழிக் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்று பேசுகிறீர்களே... மும்மொழிக் கொள்கை தொடர்பான அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்தை கண்டித்து, உங்களால் அதை திரும்பப் பெற வைக்க முடியுமா? சவால் விடுகிறேன்… அவர் உங்கள் கூட்டணிதானே? முடியுமா? சொல்லுங்கள்.
"இந்தியைக் கட்டாயமாக திணிக்கும் PM-SHRI பள்ளியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்காமல் தி.மு.க. அரசு தடுக்கிறது" என்று வேறு அமைச்சர் பிரதான் குற்றம் சாட்டியிருக்கிறார். இப்படி சொன்னால் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கான ஆதரவு இன்னும் அதிகரிக்குமே தவிர, குறையாது! நீங்கள் இன்னும் இதையே புரிந்து கொள்ளாமல் இருக்கும் காரணத்தினால்தான், இப்போது வரை நோட்டாவுடன் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே அதிக பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
மாவட்டம்தோறும் மாதிரிப் பள்ளிகள் திறந்திருக்கிறோம்.
19 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறோம்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்திருக்கிறோம்.
இப்படிபட்ட தமிழ்நாட்டிலேயா கல்வித்தரம் சரியில்லை? எங்கே வந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நான், தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி என்று சொல்லும்போதெல்லாம், "ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?" என்று பழனிசாமி கேட்பாரே… இப்போது புரிகிறதா? நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று. பழனிசாமி போன்றவர்களை விட்டால் தமிழ்நாட்டை டெல்லிதான் ஆட்சி செய்யும்.
நாம் என்ன மொழி படிக்க வேண்டும், எத்தனை மொழி படிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று, நாம் முடிவு செய்ய முடியாது. டெல்லியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலை அழுத்தி, அதற்கு ஏற்றவாறு இங்கு அ.தி.முக.வை ஆப்பரேட் செய்வார்கள். ரிமோட்டில் அங்கு ஆபரேட் செய்தால், இங்கு பழனிசாமி ஆடுவார். இப்படிப்பட்ட சீரழிவை ஏற்கனவே 4 ஆண்டு காலமாக பழனிசாமி பேரில் நடந்த பா.ஜ.க.வின் பிராக்சி ஆட்சியில் தமிழ்நாடு பார்த்துவிட்டது. இனி, அப்படி நடக்க விடவேமாட்டோம்!
தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க.வையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அ.தி.முக. உள்ளிட்ட கட்சிகளையும், வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, திமுக-வின் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது! நம்முடைய ஸ்பீடு என்னவென்று காட்டிவிடலாமா? வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? ஒரு கை பாத்துவிடலாமா? நடக்க இருக்கும் இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அதை உணர்ந்து, அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, எல்லோரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்!
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.