தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு குறித்து ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். 
தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? - ஆதவ் அர்ஜுனா கேள்விக்கு உதயநிதி பதில்

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில், திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா என்று ஆதவ் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை குறித்து திமுக எம்.எல்.ஏ எஸ். ரகுபதி சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் லஞ்சம் மிகப்பெரிய குற்றம் என்று அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் சொல்லி வருகிறார் எனக் கூறினார்.

தவெக-வில் லஞ்சம் இல்லை

அவ்வாறு யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால், இங்கு இருக்கும் ஒருவர் கூட அமைச்சராக இருக்க முடியாது என்பதை பதிவு செய்துகொண்டே வருகிறார்.

இதுவரையிலும் எந்த துறையிலும் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை ஒரு ரூபாய் வாங்கியது கிடையாது.

எம்.எல்.ஏ ஃபண்ட், பார்டி ஃபண்ட் உள்ளிட்டவை வசூலிக்கப்படவில்லை என்பதை இங்கு நாங்கள் பதிவு செய்கிறோம்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பில் நாங்கள் அடிபணிந்து விட்டதாக ரகுபதி கூறுகிறார். மேகதாது பிரச்சனைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனையாக தொகுதி மறுவரையறை உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு

நாங்கள் எதிர்கட்சித் தலைவரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என்று கேட்கிறேன்.

எங்களுக்கு டெல்லியில் வந்த தகவலின்படி, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்யவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

உதயநிதி பதில்

ஆதவுக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரியாக, அதை முதன்முதலாக பேசியது திராவிட முன்னேற்ற கழகம்தான்.

கடந்த ஆண்டுகளில் ஐந்து மாநில முதலமைச்சர்களை தமிழகத்திற்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.

அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான முடிவை எங்கள் கட்சி தலைவர் எடுப்பார்" என்று கூறினார்.