டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.
காவல் துறை அனுமதி மீறி, போராட்டம் நீடித்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், “தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு.
கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும். மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும். அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது” என திமுக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.
தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்!
மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.