தமிழக செய்திகள்

நாங்கள் கட்டபொம்மன்கள், எட்டப்பர்கள் கிடையாது: ராகுல் காந்திக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்

இந்திய கூட்டமைப்பின் மூத்த தலைவர்களும் நானும் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறோம்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவை திமுக மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலுயுறுத்தியதை தொடர்ந்து, நாங்கள் கட்டபொம்மன்கள் தான் எட்டப்பர்கள் கிடையாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 2:00 மணிக்கு சந்திக்க உள்ளனர்.

இதையடுத்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்திய கூட்டமைப்பின் மூத்த தலைவர்களும் நானும் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறோம்.

தொகுதி மறுவரையறை அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்கிறேன்.

தொகுதி விரிவாக்கத்தை 850 இடங்களாக அதிகரிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவரும்.

இது, இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும்.

சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார்.

தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும்.” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ள முக.ஸ்டாலின், நாங்கள் கட்டபொம்மன்கள் தான், எட்டப்பர்கள் கிடையாது என பதிலளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்று பங்களிப்பை அங்கீகரித்தமைக்காக, சகோதரர் ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டின் நலன்களையும் நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாக கருதியே ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம்.

இந்த பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT