தமிழக செய்திகள்

அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - அனுமதியின்றி கூடிய திமுகவினர் கைது

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர்.

த.வெ.க. அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என கூறினர்.

பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முன்னதாக அனுமதி பெற வேண்டும் எனவும், போராட்டத்திற்கு மாநகர காவல் ஆணையரிடம் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை போலீசார் அகற்றியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் காவல்துறை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.