நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. முதலில் காங்கிரசிடம் த.வெ.க. ஆதரவு கோரியதாகவும் இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் நிர்வாகிகள் த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். விஜயை சந்திக்கும் காங்கிரசார் த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், 2 அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு நாடு முழுவதும் காங்கிரசை மூட முடிவா? என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், த.வெ.க.வை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் இது தி.மு.க.வின் முதுகில் குத்தவில்லை.
வாக்களித்த தமிழ்நாட்டு மக்களின் முதுகில் காங்கிரஸ் குத்தியுள்ளது. காங்கிரசை இனி யாரும் நம்பமாட்டார்கள். எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவு என்றால் அவர்களே அறிவிக்கலாமே? த.வெ.க.வை ஆதரிக்கும் முடிவை கூற காங்கிரஸ் தலைமை அச்சப்படுவது ஏன்? இந்த முடிவு இந்தியா முழுவதும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ன நினைப்பார்கள். தேசிய அளவில் காங்கிரஸ் மீது நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும். காங்கிரஸ் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்காது என்றார்.