தமிழக செய்திகள்

தி.மு.க. விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர்.விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டன. கூட்டணி அமைக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்ததாக ஒவ்வொரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக குழு அமைக்கும் நடவடிக்கை யிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர் களிடம் இருந்து ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். விருப்பமனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியுள்ளார்.

த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்தும் விருப்பமனு பெறப்பட்டு உள்ளது. த.வெ.க.வில் போட்டியிட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் பெயரிலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பெயரிலும் ஏராளமானவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க.வில் இன்று மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி 2 அணிகள் தரப்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு விட்டது. தே.மு.தி.க. சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. முதல் விருப்பமனு விஜயகாந்த் பெயரில் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரேமலதா பெயரிலும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு கட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

தி.மு.க.வும் தேர்தல் பணியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள தி.மு.க., அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வருகிறது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில், நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விருப்பமனு குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த மனுக்களை கொடுக்கும்போது பொது தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிகளில் போட்டியிட ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகம் இன்று காலையில் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பு பவர்களுக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.

முதல் நாளான இன்று விருப்பமனு வாங்குவதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர்களில் ஏராளமானோர் விருப்ப மனு வாங்கினார்கள்.

விருப்ப மனுவில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. தி.மு.க.வில் வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணியில் வகித்த மற்றும் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி மன்றம் மற்றும் வேறு அமைப்புகளில் வசிக்கும் பதவி, தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.

விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே. எஸ். இளங்கோவன், ஆஸ்டின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு 7 விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். இதேபோல் ஏராளமானோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன. பூர்த்தி செய்த விருப்ப மனுக்கள் அன்று மாலை வரை பெறப்பட உள்ளன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.