ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூபாய் 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில், "ஆளுநர் ஒப்புதல் இல்லாமல், அரசுத்துறை செயலாளரின் அனுமதி பெற்று மட்டுமே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநரின் அதிகாரம் பற்றி எப்போது பேச ஆரம்பித்தது?" எனத் தங்களின் தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட முந்தைய விமர்சனங்களைக் சுட்டிக்காட்டி காரசாரமான கேள்வியை எழுப்பினார்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, "முன்ஜாமீன் கோரி எப்போது மனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்?" எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அன்பில் மகேஸ் தரப்பில், முன்ஜாமீன் கோரி நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், வழக்கினை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அன்பில் மகேஸின் மனு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் 29ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.