பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் தகடி கிராமத்தில் காலை உணவு திட்டப் பணிக்கு பணியாளரை நியமிப்பது தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லலிதாவிடம் போனில் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது, திமுக எம்எல்ஏவுக்கும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லலிதாவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் போனை துண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், மகளிர் திட்ட அலுவலர் கடந்த அக்.15-ம் தேதியே புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால், மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில், அக்டோபர் 17-ம் தேதி புகார் அளித்துள்ளார். அங்கும் நடவடிக்கை எடுக்காததால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.
இந்தச் சூழலில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருகம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால், திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனை கைது செய்ய தியாகதுருகம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளார். முன்ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.