தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

திமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல்

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி கோர்ட்

இதையடுத்து, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2-வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை கடந்த 30-ந்தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்

இதையடுத்து, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான தி.மு.க.வின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

நிபந்தனை ஜாமின்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மார்க்கண்டேயன் தினமும் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

மேலும், மார்க்கண்டேயன் எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.