தமிழக செய்திகள்

வாய்திறக்காத முதல்வர் என விமர்சித்த திமுக எம்.எல்.ஏ.: கொளத்தூர் பற்றி பேசிய ஆதவ்- சட்டசபையில் த.வெ.க.- தி.மு.க. கடும் அமளி

நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், வாய்திறக்காக முதலமைச்சர் என்று கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின்போது நாகர்கோவில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினார். வானமே இடிந்து விழுந்தாலும் முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.

அப்போது அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா, முதல்வருக்கு எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தெரியும். கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே (திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியை மறைமுகமாக விமர்சித்தார்) என்றார். அப்போது தேவையில்லாமல் கொளத்தூர் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவங்கர் பேசினார். திமுக எம்எல்ஏ-க்கள் ஒன்றாக எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு தவெக எம்எல்ஏ-க்கள் 106 பேரும் ஒன்றாக எழுந்து திமுக உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பு உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஹேய்.. என கூச்சலிட்டு கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சென்றனர். அப்போது ராயபுரம் தொகுதி த.வெ.க. உறுப்பினர் அவரது இடத்தில் இருந்து முன்னோக்கி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சபாநாயகர் குறிக்கிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.

அமைச்சர் ராஜ்மோகன்

உடனே கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். அமைச்சர் ராஜ்மோகன் "இங்கு நீங்கள் பேசினால் நாங்களும் பேசுவோம். நீங்கள் பேசும் மொழி எங்களுக்கும் பேசத் தெரியும். அவை மரபு மற்றும் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். எங்களை தூண்டுவது போன்று பேசினால் நாங்களும் பதிலடி கொடுப்போம். கவர்னர் உரை மீதான விவாதம் குறித்து பேசுவோம். சபைக்கு சம்மந்தம் இல்லாத, மேடைகளில் பேசுவதை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்றார். அத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.