சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கிடையே குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன் சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தார்.
இதனிடையே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து, தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார் என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர்.
இதனை தொடர்ந்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.