தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையுடன் இதற்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.
இதையொட்டி, சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஆளுநரை நேரில் சந்தித்து, கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த அரசின் கடைசி கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடரில் மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் வரும் புதன்கிழமை 17-ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.