பழனி நில மோசடி விவகாரத்தில், குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடியில் அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஏற்புடையதல்ல.
பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவழைத்து முறைகேடு செய்துள்ளனர்.
தனிநபர்கள் இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதன் பின்னணியில் சதி உள்ளது. அமைச்சர் ஒரு தகவலை கூறுகிறார். நீதிமன்றத்தில் வேறு தகவல் கூறப்படுகிறது.
பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் ஊடகத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்.
தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?
பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பழனி நிலம் விவகாரத்தில் குற்றவாளியை மறைக்க தவெக அரசு துணை போகிறது.
பழனியில் மொட்டை போடுவது வழக்கம்; ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.