தமிழக செய்திகள்

"பெண்களுக்கான இட ஒதுக்கீடு உரிமையை தி.மு.க பறித்துவிட்டது": இ.பி.எஸ் குற்றச்சாட்டு!

கல்லூரிகள், பள்ளிகள் நிறைய திறந்தோம். தி.மு.க. 200 அரசு பள்ளிகளை மூடியது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம், திருசெங்கோடு - பரமத்தி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடுமையான வெயில் நேரத்திலும் எதிரியை வீழ்த்துவதே எங்கள் லட்சியம் என்று இங்கு கூடியிருக்கும் மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். நாமக்கல் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை. நம் கூட்டணி இயற்கையானது, வலிமையானது.

எனக்கு எம்.பி என்ற அடையாளம் கொடுத்த மாவட்டம் இது.

நான் திருச்செங்கோடு எம்.பி.யாக இருந்தேன். இன்று நாமக்கல் எம்.பி. தொகுதியாகிவிட்டது. எனக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி. அம்மா இருக்கும்போதும், அதன் பின்னரும் அதிக திட்டங்கள் பெற்ற மாவட்டம் நாமக்கல். 6 தொகுதிகளிலும் தேவையான திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.

திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியில் தி.மு.க. நிர்வாகி போலி மதுபான தொழிற்சாலை வைத்திருந்தார். ஒரு பக்கம் கள்ளச்சாரயம், ஒரு பக்கம் மதுபான தொழிற்சாலை, ஒரு பக்கம் அரசு டாஸ்மாக்கிலேயே கொள்ளை அடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வறுமை என்ற நிலையே இல்லை என்கிறார் ஸ்டாலின். இது உண்மையா? அப்புறம் ஏன் கிட்னியை விற்கிறார்கள்?. ஏழைகளின் வறுமை கொடுமையைப் பயன்படுத்தி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னியை அபகரித்தனர். தி.மு.க. அரசே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்று சொல்லியது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

கிட்னி புரோக்கரை மட்டும் தான் கைது செய்தனர். மருத்துவமனை தான் தவறு செய்தது, அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கமிஷனுக்காக நடந்தது என்று புரோக்கரை கைது செய்து வழக்கை மூடிவிட்டனர்.

குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். எவ்வளவு கொடுமை, இப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா? வறுமையைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளை திருடும் அரசு தேவையா?.

இது வேளாண்மை நிறைந்த பகுதி, லாரி தொழில், ரிக் தொழில், விசைத்தறி, கைத்தறி தொழில், ஸ்பின்னிங் மில், இப்படிப்பட்ட தொழில்கள் எல்லாம் இந்த ஆட்சியில் முடங்கிவிட்டது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விசைத்தறிகள் எல்லாம் எடைக்குப் போடும் அவல நிலை வந்துவிட்டது. கைத்தறிக்கும் அதே நிலைதான். அதிமுக ஆட்சியில் கைத்தறி, விசைத்தறி சிறந்து விளங்கும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு இப்போது 300 யூனிட் விலையில்லாமல் கொடுக்கிறோம். அது 450 யூனிட்டாக உயர்த்தப்படும், விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது 1000 யூனிட் விலையில்லாமல் கொடுக்கிறோம். அது 1400 யூனிட்டாக உயர்த்தப்படும்.

கல்லூரிகள், பள்ளிகள் நிறைய திறந்தோம். தி.மு.க. 200 அரசு பள்ளிகளை மூடியது. ஆனால் அ.தி.மு.க. அரசு கல்வி கற்கும் எண்ணிக்கையை உயர்த்தியது.

ஸ்டாலின் பொற்கால ஆட்சி கொடுப்பதாக சொல்கிறார். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணை எல்லாம் விலை உயர்ந்துவிட்டது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு உரிமையை தி.மு.க பறித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.