தமிழக செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வடமாநிலத்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சர் உத்தரவின்பேரில் தாக்கல் செய்வோம் என மரிய வில்சன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று வேளாங்கண்ணி கோவிலில் மாதாவை தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“இன்னும் இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கு, நமது குழு செயல்பட்டு வருகின்றது. கூடிய விரைவில் அதை தாக்கல் செய்வோம்.

மக்களுக்கு ஒரு தெளிவான ஒரு அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தாக்கல் செய்வோம். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று 8 முதல் 10 நாட்கள் தான் ஆகிறது. துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடத்தி, நிதிநிலை அறிக்கை சம்பந்தமான தகவல்களை கேட்டுள்ளேன்.

மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதற்கான முழு விவரங்களும் செய்தி நிறுவனங்கள் வழியாக மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 பணத்தை வடமாநிலத்தவர்களுக்கும் கடந்த ஆட்சியில் வழங்கி உள்ளனர். அதிகுறித்தும் ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம்.

கடந்த 2021ஆம் ஆண்டின் கடைசி நேரத்தில் விவசாயக் கடன் ரத்து தொடர்பாக அதிமுக அறிவித்தது. அது அடுத்த திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 45 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடியை முழுவதுமாக செய்துமுடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்” என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT