இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 1949-ம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.
1949 நவம்பர் 26-ல் ஏற்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. அது குடியரசு தினமாக கொண்டாப்படுகிறது.
இந்நிலையில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
1949-ஆம் ஆண்டு இதே நாளில்தான், பல நூற்றாண்டுகளாகச் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த இந்தியாவில், சமத்துவத்தை உறுதிசெய்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.
காலந்தோறும் மாறிவரும் சமூகத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரிணமிக்கும் உயிரோட்டமுள்ள ஆவணமாகவே நமது அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார்.
குடியரசாக நமது பயணத்தில், 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றிட அரசியலமைப்புச் சட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாதது ஆகிறது.
இந்த நோக்கத்துடன்தான் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் ஒன்றிய- மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை நமது திராவிட மாடல் அரசு அமைத்தது.
தற்போதைய ஆட்சியாளர்கள் அக்குழுவைக் கலைத்திருந்தாலும், மாநில சுயாட்சிக்காகவும் உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம் தொடரும்!
இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்கான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்போம்!”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.