தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் சி.விஜயபாஸ்கர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 773 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.கே. செல்லப்பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க கோரி 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை விநியோகித்தார்.
வாக்காளர்கள் பிரிட்ஜ் வாங்க கூப்பன்களை வினியோகித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டார்.
எனவே சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கில் கூறியிருந்தார். வழக்கை நீதிபதி என்.செந்தில்குமார் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியதை பதிவு செய்தார்.
இதுகுறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.