மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில், இந்துக்களை வெளியே நிற்க வைத்தது வேதனை அளிக்கிறது. கோவில்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு, ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் வருகை தந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு 1½ வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. நீண்ட நாட்களாகக் கும்பாபிஷேகம் வேலைகள் நடைபெறாமல் நிற்கிறது. இறைவனிடம் பிரார்த்தித்து, அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். கோவிலின் கும்பாபிஷேகத்தை மிக விரைவில் நடத்துவதற்கு அரசு பரிசீலித்து முயற்சி செய்ய வேண்டும்.
சமீபத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதனை தமிழக அரசு தவிர்க்க வேண்டும். எனவே முதல்வரிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் மாநிலத்தில் நல்ல பணிகளைச் செய்யுங்கள், குழந்தைகள் படிப்பதற்கு முழு வசதிகளைச் செய்து கொடுங்கள். மற்ற சிந்தனைகளை விடுத்து, மாநிலத்தின் நலனில் கவனம் செலுத்துங்கள், பிரதமர் பதவி உள்ளிட்ட அனைத்தும் அதன்பின்பு பேசிக்கலாம்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில், இந்துக்களை வெளியே நிற்க வைத்தது வேதனை அளிக்கிறது. கோவில்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை. ஒரு நாணயத்தில் இரண்டு முகங்கள் போலத்தான் உள்ளது. முன்னாள் முதல்வர் கோவிலுக்குள் வராமல் நெற்றியில் வைத்த பொட்டை அழித்தார். தற்போதைய முதல்வர் கோவிலுக்குள் வருகிறார். பொட்டு வைத்துக் கொள்கிறார். ஆனால் இந்து தர்ம விரோதமாகவே உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.