திருச்சி காமராஜர் அறிவுலகம் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நூல் கொள்முதலில் போலி பதிப்பகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் எழுதப்பட்ட தரம் குறைந்த நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது சிந்தனை தளம் மூலமாக பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். நடைமுறையிலேயே இல்லாத 'அகல் விளக்கு' போன்ற போலிப் பதிப்பகங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் புத்தகங்கள் பலமடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வரலாற்றுத் தகவல்கள் மற்றும் படங்கள் முற்றிலுமாகத் திரிக்கப்பட்டு, நூல்களின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருச்சி காமராஜர் அறிவுலகம் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தெம்பு, திராணி இருந்தால் திமுக ஊதுகுழல்கள் இதை மறுக்க முடியுமா?" என சவால் விடுத்தார்.
திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கு AI புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல்முறையாக நடந்துள்ள AI ஊழல். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு புத்தக கொள்முதல் ஆணையை திமுக அரசு வழங்கியது. 7 நாட்களில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் வந்ததோ குப்பையை விட மோசமான 40 பெட்டி புத்தகங்கள்.திறப்பு விழாவிற்காக புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது போடப்பட்ட சீல்களை, திமுகவினர் தற்போது மடைமாற்றம் செய்து பேசுகின்றனர். AI மூலம் எழுதப்பட்ட புத்தகங்களை தலா ரூ.50 கோடிக்கு பல்வேறு நூலகங்களுக்கு வாங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. காமராஜர் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு AI புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் ஆணை போடப்பட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.