தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் சொன்னபடி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதனால் 2 மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நீடித்து வருகிறது.
இந்தப் பிரச்சனையை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நேரில் சந்தித்துப் பேசி முடிவு காண முதலமைச்சர் விஜய் திட்டமிட்டார். இந்தச் சந்திப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அவரது படத்தின் பேனர்களைக் கிழித்து எறிந்தார்கள். இதனால் பெங்களூரு, மைசூரு உள்பட பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பயணத்தை தவிர்க்கும்படி கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். இதனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நாளை இரவு சென்னை வருகிறார். அவர் மாநாடு நடைபெறும் கோவளம் நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்குகிறார். மறுநாள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்தத் தருணத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரியில் அறிவித்தபடி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மேலும், மேகதாது அணை கட்டும் விஷயத்திலும் சிவக்குமார் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
அதேபோல், காவிரி நீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் சந்தித்தால் என்ன மாதிரி பலன் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஏற்கனவே, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி குண்டுராவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, 1997-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட் ஆலோசனையின்படி அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜே.எச்.பாட்டீலைச் சந்தித்துப் பேசினார். அதேபோல், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2012-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஸ் ஷெட்டரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்-மந்திரியைச் சந்தித்துப் பேசுவது சரியாக இருக்காது என பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.