மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என்று டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.
தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவே அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவளம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் அனைத்து மாநில முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு விருந்து சாப்பிட்டார். அதை தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலிலேயே அமித்ஷா தங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய மாநாட்டிற்கு அமித்ஷா தலைமை தாங்கினார். மாநாட்டு குழுவின் துணைத் தலைவரான முதலமைச்சர் விஜய் வரவேற்று பேசினார்.
மாநாட்டில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த்மோகன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல் -மந்திரி சதீசன், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுபாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன்,
தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன், தலைமை செயலாளர் சாய் குமார், கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் மற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 2 அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேகதாது அணை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது:-
* மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும்.
* மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது.
* நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும்
* ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை.
* கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது.
* நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம்.
* தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது.
* மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன் வைத்தது என்றார்.
அவரை தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பேசுகையில்,
* புதுச்சேரியின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்.
* கோதாவரி இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே குடிநீர், பாசனத்திற்காக கூடுதலாக நீர் திறக்க வேண்டும்.
* குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு பிரத்யேக குழாய் அமைக்க வேண்டும்.
* சங்கராபரணி- தென்பெண்ணையாறை இணைக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.
அதை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மாநிலங்கள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவுகள், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது, ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பொதுவான மாநில விவகாரங்கள் பற்றியும் செயலாக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.