தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது: முதல் மந்திரி சிவக்குமார்

நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல் மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.

தென் மாநில முதல் மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் நலன் கருதி நாங்கள் பல்வேறு விஷயங்களை முன்வைத்துள்ளோம்.

முக்கிய கோரிக்கை

1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே முக்கிய கோரிக்கையாக இருந்தது.

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என நான் கருதுகிறேன். அதனால்தான் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.

எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேகதாது அணை விவகாரத்தைப் பொறுத்தவரை குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைத் தவிர, அணையில் உள்ள மற்ற அனைத்து நீரும் — ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் — தமிழ்நாட்டிற்கே திறந்துவிடப்படும் என உள்துறை அமைச்சரின் முன்னிலையில் நான் உறுதி அளித்துள்ளேன்.

எனவே, தமிழ்நாடும் புதுச்சேரியும் இதுகுறித்து முழு நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்த அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே கட்டப்படவுள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக, மேகதாது அணை குறித்து பேசிய கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:

மேகதாது அணையால் தமிழகத்துக்கே பலன்

மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.

நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை.

கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நதிநீர்ப் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகரவேண்டிய நேரம்.

தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது. மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன்வைத்தது என தெரிவித்தார்.