தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை மக்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
கனமழை பெய்து சிறிது நேரம் தூறல் கூட இல்லாமல் மழை நின்று விடும். பின்னர் சிறிது நேரம் கழித்து கன மழை பெய்யும். இவ்வாறு நேற்றிரவு முதல் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
இன்று காலை மக்கள் தீபாவளியை புத்தாடை அணிந்து வரவேற்றனர். ஆனால், பட்டாசு வெடிக்க கனமழை தொடர்ந்து அனுமதிக்கவில்லை. விட்டுவிட்டு மழை பெய்ததால் மழை நிற்கும்போது பட்டாசு வெடித்து பின்னர் வீட்டிற்குள் வந்து விட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
பொதுவாக தீபாவளியின்போது காலையில் பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு டி.வி.யில் பட்டிமன்றம், சினிமா படங்கள் பார்த்துவிட்டு மாலையில் மெரினா, பூங்கா போன்ற இடங்களுக்கு மக்களுக்கு செல்வது வழக்கம். மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடுவார்கள்.
ஆனால், மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் மெரினா, பூங்கா போன்ற இடங்களில் வெறிச்சோடி காணப்பட்டன.