தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் பயணத்தை தொடர்ந்தனர்.
பொது மக்கள் நெரிசல் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகங்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா தற்காலிக பஸ் நிலையம் மற்றும் மறைமலை நகர் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வெளியூர் செல்லக்கூடிய பொதுமக்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதியை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்திருந்தார். அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்களும் பயன்படுத்தப்பட்டன.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு நேற்று மாலையில் இருந்தே பயணிகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
நேற்று ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்தனர். 2,191 வழக்கமான பஸ்கள் மற்றும் 2,870 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் 1,018 சிறப்பு பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 3,209 பஸ்கள் இயக்கப்பட்டன.
இரவு 12 மணி நிலவரப்படி 1 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் கிடைத்ததா? என்று கேட்டறிந்தார். பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் அவர் கலந்துரையாடினார்.
தாமதம் இல்லாமல் பயணம் தொடர செய்யப்பட்டுள்ள வசதி போதுமானதா? மேலும் பயணிகள் சிரமம் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைகிறார்களா? என்பதை தொடர் ஆய்வின் மூலம் கேட்டறிந்தார்.
இந்தநிலையில் மதுராந்தகத்தில் புதிய பஸ் சேவையை அமைச்சர்கள் விஜய் தமிழன் பார்த்திபன், சரத்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பஸ் வசதி இல்லாத கிராமப் புறங்களை இணைக்கும் வகையில் 9 வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் வீரப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் ஆம்னி பஸ்களில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனையும் சேர்த்து சுமார் 2 லட்சம் பேர் பஸ்களில் மட்டும் பயணம் செய்து உள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை 2,191 வழக்கமான பஸ்கள் மற்றும் 3240 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 5,431 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதி கரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.