முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது கூட மேயர் என்ற முறையில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரியாக ஆணையாளர் மீது குற்றம் சாட்டினர்.
அரசு நிகழ்ச்சிகளிலோ அல்லது மாநகராட்சி நிகழ்ச்சிகளிலோ எது நடந்தாலும் தகவல் தருவதில்லை, அழைப்பு கொடுப்பதில்லை என்று தி.மு.க. கவுன்சிலர் பேசினார்கள். புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் கல்வெட்டில் திறப்பாளர் பெயர் மேலே குறிப்பிடப்பட்டு மற்ற மக்கள் பிரதிநிதிகள் பெயர்கள் கீழே பொறிக்கப்படுகிறது என்று ஆவேசமாக ஒவ்வொருவரும் எழுந்து பேசினார்கள்.
கடந்த சில மாதங்களாகவே அரசு, மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான அழைப்பு கொடுப்பதில்லை. முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது கூட மேயர் என்ற முறையில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளை அழைக்கக் கூடாது என்று அரசு தரப்பில் இருந்து ஏதாவது அறிவுறுத்தல் வந்துள்ளதா? என்று தெரியவில்லை. அரசுக்கு விருப்பமில்லை என்றால் மாநகராட்சியை கலைத்து விடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதலமைச்சர் மாநகராட்சிக்கு வருவது குறித்த தகவல் தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருப்போம். அவரை வர வேற்று இருப்போம். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
தி.மு.க. கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையாளரை பார்த்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும், தகவல் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறோம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அழைக்க வேண்டும் யாரையும் ஒதுக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.
இது பற்றி மேலும் அறிவுறுத்தப்படும். இதற்காக கூட்டம் நடத்தி அதில் கண்டிப்பாக அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்துவோம் என்றார்.
சென்னையில் செயல்படும் 382 அம்மா உணவ கங்களில் பணியாற்றும் 2,848 பெண்களுக்கு ரூ.325-ல் இருந்து 400 ரூபாயாக சம்பள உயர்வு வழங்குவது, இதற்காக ரூ. 7 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரம் மாநகராட்சி நிதியில் செலவு செய்ய அனுமதி அளித்தல்.
24,264 தூய்மை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவிற்கு பதிலாக உணவுப்படியாக ஒருவருக்கு ஒரு நாளுக்கு 50 ரூபாய் வழங்குதல்,
மயிலாப்பூர் லஸ் சர்ச்சாலையின் பெயரினை எம்.சி.டி.எம். சிதம்பரம் சாலை என பெயர் சூட்டுவது, மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வந்த டென்னிஸ், பூப்பந்து, டேபிள் டென்னிஸ், மற்றும் ஸ்கேட் டிங் விளையாட்டு திடல்களை நிதி சுமையின் காரணமாக 3 வருடங்களுக்கு தனியாரிடம் ஒப்படைக்க அனுமதி. 95 விளையாட்டுத் திடல்கள் இனி தனியார் மூலம் பராமரிப்பது உட்பட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.