VCK THIRUMAVALAVAN - PA RANJITH 
தமிழக செய்திகள்

TN Assembly Election: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி - இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திருமாவளவனுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.

திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் எம்.பி.யாக உள்ள விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியுள்ளது அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திருமாவளவனுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.

ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.