தமிழக செய்திகள்

என் கலையின் நேர்மை அதுதான்..!- மாணவர்களின் போராட்டத்திற்கு மாரி செல்வராஜ் ஆதரவு

அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.

போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.