பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இரங்கல் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நகைச்சுவை, குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை மையமாகக் கொண்டு பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி..!🙏
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் திரு. பாக்யராஜ் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.