முத்துக்குமார் மனைவி லாவண்யா மற்றும் எமக்கலாபுரத்தைச் சேர்ந்த கள்ளக்காதலன் துளசிமணி, அழகுசின்னு ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல், திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). இவரது மனைவி லாவண்யா (23). இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் அருேக உள்ள எமக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் துளசிமணி (28). இவர் தனியார் குளிர்பான ஏஜென்சியில் மளிகை கடைகளுக்கு குளிர்பானங்களை டெலிவரி செய்யும் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இதனால் திருமலைசாமிபுரத்தில் உள்ள லாவண்யா மளிகை கடைக்கும் அடிக்கடி சென்றபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனை முத்துக்குமார் கண்டித்துள்ளார். மேலும் இந்தப் பிரச்சினையால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லாவண்யா தனது கள்ளக்காதலன் துளசி மணியிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து துளசி மணி மற்றும் அவரது நண்பர் எமக்கலாபுரத்தை சேர்ந்த அழகுசின்னு (43) என்பவருடன் முத்துக்குமார் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் முத்துக்குமாரிடம் எங்கள் பழக்கத்தை ஏன் தடுக்க நினைக்கிறீர்கள்? என கேட்டு தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் முத்துக்குமாரை அவரது மனைவி லாவண்யா துளசிமணி, அழகு சின்னு ஆகிய 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்தார். மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டவுன் போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திக் தலைமையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து முத்துக்குமார் மனைவி லாவண்யா மற்றும் எமக்கலாபுரத்தைச் சேர்ந்த கள்ளக்காதலன் துளசிமணி, அழகுசின்னு ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.