விபத்து 
தமிழக செய்திகள்

திண்டுக்கல் அருகே இரு வேறு விபத்துகளில் 5 வாலிபர்கள் பலி

விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு வேறு விபத்துகளில் 5 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகில் உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று நிலக்கோட்டையில் இருந்து செம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.

விபத்து

அப்போது செம்பட்டியில் இருந்து நிலக்கோட்டை நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் குரும்பபட்டியை சேர்ந்த தங்கபாண்டி (25), ஊர்க்காலன் (22) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். ஒட்டுப்பட்டி என்ற இடத்தில் 2 ேமாட்டார் சைக்கிள்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக உடைந்த நிலையில் ஊர்க்காலன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. தெய்வம், செம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்த வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள மாலைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் மதுரை மணி(24). இவர் நேற்று மாலை கொடைரோட்டிலிருந்து மாலைய கவுண்டன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அதேபோல குஜிலியம்பாறை அருகே காரைக்கால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலகராஜ் மகன் மனோஜ் (21) என்பவர் நிலக்கோட்டையிலிருந்து கொடைரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்களது 2 மோட்டார் சைக்கிள்களும் அம்மையநாயக்கனூர் ெரயில்வே பாலம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு

அதில் மதுரை மணி என்பவர் ஆம்புலன்சில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மனோஜ் என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தீபாவளி நாளில் இரு வேறு விபத்துகளில் 5 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT