ஆசிட் புகையை சுவாசித்ததன் மூலம் மக்களுக்கு தொண்டை கரகரப்பு, கண் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து கரூர் நோக்கி சுமார் 25,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி, திண்டுக்கல் - கரூர் 4 வழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
லாரியை மதியழகன் ஓட்டி வந்தார். அதிகாலை நேரத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடம் மாறியது. அப்போது தூத்துக்குடியில் இருந்து நாமக்கல் நோக்கி சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற மற்றொரு லாரி ஆசிட் லாரியின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் ஆசிட் லாரி டேங்கின் வால்வு முழுமையாக உடைந்து சேதமடைந்தது. லாரியில் இருந்த 25,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் முழுமையாகச் சாலையில் கசிந்து ஓடியது. இதனால் நெடுஞ்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆசிட் புகைமூட்டம் சூழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் போக்குவரத்தை உடனடியாக சீரமைத்தனர்.
தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் மயில் ராஜ தலைமையில், 10 தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆசிட் மீது தண்ணீரைத் தொடர்ந்து பீய்ச்சியடித்து அதன் வீரியத்தைக் குறைத்து, புகை பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த பகுதியில் மற்ற வாகனங்கள் அனுமதிக்காமல் மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆசிட் புகையை சுவாசித்ததன் மூலம் மக்களுக்கு தொண்டை கரகரப்பு, கண் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.