தமிழக செய்திகள்

TN Assembly Election| பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அனல் பறக்கும் டிஜிட்டல் பிரசாரம்- லைக்குகள் வாக்குகளாக மாறுமா?

​சமூக வலைதளப் பிரசாரம் ஒருபுறம் வேட்பாளர்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தாலும், மற்றொருபுறம் போலி செய்திகள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தேர்தல் களம் வீதிகளில் நடப்பதை விட, மக்களின் உள்ளங்கையில் இருக்கும் ‘ஸ்மார்ட்போன்’ திரை வழியே அதிக வீரியத்துடன் நடந்து வருகிறது. 5 வயது சிறுவன் முதல் 90 வயது முதியவர் வரை இன்று செல்போனில் மூழ்கிக் கிடக்க, வேட்பாளர்களும் அவர்களின் ‘டிஜிட்டல் வாரியர்ஸ்களும் இப்போது சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர்.

​நேற்று வரை சினிமா பாடல்களுக்கும், நகைச்சுவை காட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ மற்றும் பேஸ்புக் பக்கங்கள், இன்று வேட்பாளர்களின் அதிரடி பிரசார களமாக மாறியுள்ளன. வேட்பாளர் மக்களிடம் கைகுலுக்குவது, முதியவர்களிடம் ஆசி பெறுவது, டீக்கடையில் வடை சாப்பிடுவது என அனைத்தையும் சினிமா பட ரேஞ்சுக்கு ‘மாஸ்’ மியூசிக் போட்டு எடிட் செய்கின்றனர். இதற்காகவே பிரத்யேகமான வீடியோ எடிட்டர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் சமூக வலைதள மேலாளர்களை ஒவ்வொரு வேட்பாளரும் சம்பளம் கொடுத்து நியமித்துள்ளனர்.

​இந்த தேர்தலில் ஒரு பெரிய மாற்றமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது. மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் குரல்களையும் உருவத்தையும் ஏ.ஐ., மூலம் மீளுருவாக்கம் செய்து, அவர்கள் தற்போதைய வேட்பாளருக்கு வாக்கு கேட்பது போன்ற வீடியோக்கள் வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

அதே போல் வாட்ஸ்அப் குழுக்கள் இப்போது ‘டிஜிட்டல் திண்ணை ’களாக மாறிவிட்டன. தொகுதி வாரியாக ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் வேட்பாளரின் தினசரி செயல்பாடுகள், எதிர்க்கட்சியினரின் குறைகளை சுட்டிக்காட்டும் மீம்ஸ்கள் காட்டுத்தீயாக பரப்பப்படுகின்றன.​

இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைக் கவர்வதே இந்த டிஜிட்டல் பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. 30 முதல் 60 நொடிகள் கொண்ட வீடியோக்கள் மூலம் கட்சியின் சாதனைகளையும், வாக்குறுதிகளையும் மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.

"இன்று பொழுது போக்கு வீடியோக்களை விட, அரசியல் நையாண்டி வீடியோக்களும், வேட்பாளர்களின் பிரசார வீடியோக்களுமே மக்களிடம் அதிகம் சென்றடைகின்றன," என்கின்றனர் சமூக வலைதள ஆய்வாளர்கள்.

​சமூக வலைதளப் பிரசாரம் ஒருபுறம் வேட்பாளர்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தாலும், மற்றொருபுறம் போலி செய்திகள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதனால் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டிய கட்டாயம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சுவர் விளம்பரங்களும், துண்டுப் பிரசுரங்களும் மெல்ல மறைந்து வரும் சூழலில், சமூக வலைதள வீடியோக்களே இந்தத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனும் இந்த டிஜிட்டல் யுத்தத்தின் சாட்சியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

தமிழக தேர்தல் களம் இப்போது வீதிகளில் இருந்து விர்ச்சுவல் உலகிற்கு இடம் பெயர்ந்துவிட்டது. ஒவ்வொரு ‘லைக்’கும் ஒரு வாக்காக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்கி பிரசாரங்களை தொடங்கி உள்ளனர். இதில் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் டிரெண்டான பாடல்களை தங்களது வீடியோக்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது போல் தொழில் நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று வாக்குகள் சேகரித்து அதனை சமூகவலைதளங்களில் போட்டி போட்டு பதிவிட்டு வருகின்றனர்.