தமிழக செய்திகள்

சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் ‘டிஜி யாத்ரா’ திட்டம் அறிமுகம்: சோதனை முறையில் தொடக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, செயல்பாட்டில் உள்ள, இந்த டிஜி யாத்ரா முறை, பயணிகளின் வசதிக்காக, சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதிக்கும், விரிவுபடுத்தப்படுகிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டிஜி யாத்ரா திட்டம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயணிகளுக்கு விரைவான சோதனை மற்றும் நுழைவு வசதிகளை வழங்குகிறது. முதற்கட்டமாக, துபாய் மற்றும் கொழும்பு செல்லும் விமானங்களில் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. 2027 முதல் அனைத்து சர்வதேச புறப்பாடுகளுக்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு புறப்பாடு விமான பயணிகளுக்கு, டிஜியாத்ரா ( DigiYatra ) முறையின் படி, அதி விரைவாக சோதனைகளை முடித்துவிட்டு, விமான நிலையத்திற்குள் பயணிகள் செல்லும் முறை, கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, செயல்பாட்டில் உள்ளது.

அந்த டிஜியாத்ரா சிஸ்டம் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்ததால், அந்தத் திட்டத்தை சர்வதேச விமான பயணிகளுக்கும், விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள், பயணிகளிடம் இருந்து, தொடர்ந்து வந்து கொண்டு இருந்தன.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, செயல்பாட்டில் உள்ள, இந்த டிஜி யாத்ரா முறை, பயணிகளின் வசதிக்காக, சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதிக்கும், விரிவுபடுத்தப்படுகிறது.

அதன்படி சர்வதேச புறப்பாடு பயணிகளுக்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகளுக்கு எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் விதத்தில், சென்னை சர்வதேச விமான முனையத்தில், "டிஜி யாத்திரா- இன்டர்நேஷனல் பேசஞ்சர் டிரைல்ஸ்," எனப்படும் சோதனை முறை, இந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த டிஜி யாத்திரா இன்டர்நேஷனல் முனையத்தில், சோதனை திட்டம், 2026 நவம்பர் ஒன்றாம் தேதியில் முதல், 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் 2 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

அதோடு இந்த சோதனை காலத்தின் போது, முதல் கட்டமாக, சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

விவரங்கள் சரிபார்ப்பு

அதோடு இந்த சோதனை காலத்தில், கூடுதல் சர்வதேச விமானங்கள், அதைப்போல் வேறு விமான நிறுவனங்களின் விமானங்கள், போன்றவைகளுக்கும் படிப்படியாக விரிவு படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு வருகின்ற 2027 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்தத் திட்டம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முழுமையாக அனைத்து புறப்பாடு விமானங்களுக்கும், செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த டிஜி யாத்திரா வசதியை பெற விரும்பும் சர்வதேச விமான பயணிகள், டிஜி யாத்திரா செல்போன் செயலி மூலம், இ பாஸ்போர்ட் அடிப்படையிலான, சரியான டிஜிட்டல் அடையாளத்தை, உருவாக்க வேண்டும்.

இதற்காக இ பாஸ்போர்ட், இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்படும். அதோடு ஸ்மார்ட் போனின் தொழில்நுட்பம் மூலம், பாஸ்போர்ட்டில் உள்ள மின்னணு சிப் விவரங்கள், சரி பார்க்கப்படும்.

இவ்வாறு உருவாக்கப்படும் டிஜிட்டல் அடையாளங்கள், பயணியின், ஆண்ட்ராய்டு போனில் உள்ள டிஜி யாத்திரா டிஜிட்டல் வாலட்டில், பாதுகாப்பாக சேமிக்கப்படும்.

இந்த டிஜி யாத்திரா பதிவு செய்யும் நடைமுறைகள் மற்றும் இந்த வசதிகளை பயன்படுத்துவது குறித்து, பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக, சென்னை விமான நிலையத்தில், "டிஜி பட்டீஸ்"என்ற உதவிப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த டிஜி யாத்திரா டிஜிட்டல் முறையிலான ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடந்தாலும், சர்வதேச பயணிகளுக்கு, விமான நிறுவனங்களின் கட்டாய ஆவணங்கள் சரிபார்ப்பு, குடியுரிமை அதிகாரிகளின் நடைமுறைகள், போன்றவைகள், வழக்கம்போல் நடக்கும்.

சென்னை விமான நிலையத்தில், சர்வதேச விமான பயணிகளுக்கு, ஏற்கனவே இமிகிரேஷன் பிரிவில், பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் சோதனை முறை செயல்பாட்டில் உள்ளது. அதனால் பயணிகள், இமிகிரேஷன் சோதனையில், நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல், உடனுக்குடன் சோதனைகள் நடத்தி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, விமான நிலையத்திற்குள் நுழைவு வாசல் பகுதியிலும், டிஜிட்டல் முறையிலான, டிஜி யாத்திரா சோதனை திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால், இனிமேல் சர்வதேச விமான பயணிகள், நுழைவு வாசல் சோதனை, பாதுகாப்பு சோதனை, இம்மிகிரேஷன் சோதனை போன்றவர்களில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல், உடனுக்குடன் சோதனைகள் முடிந்து, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு தயாராகி விடுவார்கள்.

இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT