2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் பல தசாப்த கால அரசியல் மரபுகளை உடைத்தெறிந்து ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் என்றால், அது ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அதில் ஒன்றுதான் பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் இதில் ஒரு தவறான தகவல் ஒன்று இணையம் முழுவதும் பரவி வருகிறது. அதாவது தவெக தலைவர் விஜய் 70 பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
புதிதாக அமையவுள்ள 17வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 25 பேர், பட்டியலின மற்றும் பழங்குடியின (SC/ST) சமூகத்தைச் சேர்ந்த 50 பேர், மற்றும் 23 பெண் உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். மேலும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு பிராமண உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்லவுள்ளனர்.
இதில் தவெகவிற்கு முக்கியப் பங்கு உண்டு. 44 தனித்தொகுதிகளில் 24 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது. மேலும் சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள 25 சிறுபான்மையின எம்.எல்.ஏ-க்களில் 13 பேர் தவெக-வைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் கட்சித் தலைவர் விஜய், ஆர்.கே. நகர் தொகுதியில் வென்ற மரிய வில்சன் மற்றும் ராணிப்பேட்டை தொகுதியில் வென்ற தாஹிரா ஆகியோரும் அடங்குவர்.
அதுபோல தவெகவின் வெங்கட்ராமணனும், ரமேஷும் பிராமண உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் 70 பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. எட்டுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களைக் களம் இறக்கி அதில், 4-ல் வெற்றிப் பெற்றுள்ளது.