தமிழக செய்திகள்

“மக்களை தெருநாய் எனக் குறிப்பிட்டேனா?” - சர்ச்சைக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்

எனது ரசிகர்களும், மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்றும் எப்போதும் கூறுபவன் நான்.

நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது அரசியல் வருகை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தவெக அரசின் செயல்பாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தெருநாய்களை உதாரணமாக கொண்டுப் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, தற்போது அதற்கு விளக்கமளித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“அனைவருக்கும் வணக்கம். இன்றைய எனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு தவறான புரிதலைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனது ரசிகர்களும், மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்றும் எப்போதும் கூறுபவன் நான். அப்படிப்பட்ட மக்களை நான் 'நாய்கள்' என்று குறிப்பிட்டதாகச் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்; இது முற்றிலும் பொய்யானது மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலாகும்.

தவெகவின் தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அவர்கள் 'தவெக-வின் அம்புக்குறி' என்று நான் கூறியிருந்தேன். எனது இந்தக் கருத்தைச் சூழலுக்குப் புறம்பாகத் திரித்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியும்.

எனவே, முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மிகவும் மதிக்கும் மற்றும் என் தாய்க்குச் சமமாகக் கருதும் எனது மக்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பப்படுவதால் மட்டுமே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.