தமிழக செய்திகள்

தி.மு.க.வின் முதுகில் குத்தியதா காங்கிரஸ்? எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம்

திமுகவிடம் கூறிவிட்டு முறையாக பிரிந்திருக்கலாம் என்பதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேன்.

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்தநாளே அதனை வெட்டிவிட்டு, தவெகவிற்கு தாவியது. இதற்கு திமுக தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த விமர்சனங்கள் தொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்,

“காங்கிரஸ் மீதான திமுகவின் விமர்சனம் தேவையற்றது. திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தோம். தேர்தலுக்கு முன்னரே வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என கட்சியினர் கூறினர்.

ஆனால் நீண்டநாள் கூட்டணி என்பதால் திமுகவுடன் தொடர்ந்தோம். தேர்தலை முழுமனதுடன்தான் சந்தித்தோம். ஆனால் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வளரவில்லை.

மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். ஆட்சியமைக்கும் வாய்ப்பு திமுகவிற்கு கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக தவெக வந்தது. இன்னும் இரண்டு மூன்று கட்சிகளுடன் இணைந்து அவர் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும். ஸ்டாலின் மீது இப்போதும் மரியாதை உள்ளது. ஆட்சி அமைக்க முடியாத திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது எனச் சொல்வது பொருத்தமற்றது. திமுக ஆட்சியமைக்கும் நிலையில் இருந்து நாங்கள் தவிர்த்துவிட்டோம் என்றால் அவ்வாறு கூறலாம்.

பரஸ்பரமாக கூறி பிரிந்திருக்கலாம். அதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் திமுகவிற்கான எந்த வாய்ப்பையும் நாங்கள் மறுக்கவில்லை.

நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.” என தெரிவித்துள்ளார்.