தமிழக செய்திகள்

5 நட்சத்திர விடுதியில் தோனி வாக்குமூலம்: ஐகோர்ட் நீதிபதி எழுப்பிய கேள்வி!

தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு தோனி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

வழக்கு

கடந்த 2013-ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி 2014-ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி கேள்வி

அந்த மனுவில், வாக்குமூலம் பதிவை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். வாக்குமூல பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களில் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டிடம் அல்லது நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ஐந்து நட்சத்திர விடுதியில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்சனை? அதற்கான செலவுகளை அவர்கள்தானே செய்யப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, தோனி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தோனிக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT