தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு: 6-வது சுற்று முடிவில் த.வெ.க. முன்னிலை

இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தாராபுரம் இடைத்தேர்தலில் 6-வது சுற்று முடிவில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 16,201 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். அ.தி.மு.க. 14,807 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வந்தது. தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 2 சுற்றுகளில் த.வெ.க. முன்னிலை வகித்தது.

அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளில் த.வெ.க. பின்னுக்குத்தள்ளப்பட்டு அ.தி.மு.க. முன்னிலை வகித்தது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா தற்போது முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 16,201 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 14,807 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 13,797 வாக்குகள் பெற்று தி.மு.க. மூன்றாம் இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 1,146 வாக்குகள் பெற்றுள்ளார்.

தாராபுரத்தில் 4 சுற்றுகளில் அ.தி.மு.க. முன்னிலை பெற்ற நிலையில் 5,6 சுற்றுகள் முடிவில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கள நிலவரமும் மாறி நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது.

SCROLL FOR NEXT