தமிழக செய்திகள்

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று கடும் பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையிலும் பனி மூட்டம் அதிகமாகவே இருந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கி உள்ள நிலையில் இன்னும் மழைப் பொழிவு தீவிரம் அடையவில்லை. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான அர்னாப், முரசு, அக்வான் ஆகிய 3 புயல்களும் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடந்தது.

அக்வான் புயல் நேற்று முன்தினம் ஒடிசா அருகே கரையை கடந்துள்ள நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை வழக்கத்தைவிட பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தாம்பரம்

இன்று காலையில் சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், ஆவடி, அம்பத்தூர், மாதவரத்தை அடுத்துள்ள வட பெரும்பாக்கம், விளாங்காடு பாக்கம், ஞாயிறு உள்ளிட்ட இடங்களிலும், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் பனி பொழிவு காணப்பட்டது. இதனால் சீரான வேகத்தில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

திடீரென மாறிய இந்த வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மழைபெய்யும் என்று நினைத்து இருந்த நேரத்தில் மாறாக பனி மூட்டமாக காணப்பட்டது. குளிரும் இருந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகரத்தில் ஒட்டி உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் நெடுஞ்சாலை முழுவதும் காலை பனிமூட்டத்தால் புகை போல் காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனர். காலை 8 மணிவரை இந்த பனிமூட்டம் நீடித்தது.

பனிப்பொழிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இன்று காலை வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் அதிக அளவில் இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

இதில் திருவள்ளூர், ஈக்காடு, பூண்டி, கனகம்மாசத்திரம், மணவாளநகர், போலிவாக்கம், கடம்பத்தூர் பேரம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையிலும் பனி மூட்டம் அதிகமாகவே இருந்தது.

SCROLL FOR NEXT