தமிழக செய்திகள்

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி: ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்!

"விண்ணை முட்டும் அளவுக்கு அடர்ந்த கரும்புகை வான் உயர எழும்பியது"

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பழைய கணினி மற்றும் மென்பொருள் நிறுவன உதிரிபாகங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

சென்னை போரூரில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் இருந்து, மறுபயன்பாட்டிற்காக பழைய பேட்டரிகள் மற்றும் கணினி உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் லாரி ஒன்று மகாராஷ்டிர மாநிலம், புனே நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் தமிழரசன் ஓட்டி வந்துள்ளார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே லாரி வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் இருந்த பழைய பேட்டரிகளில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. அடுத்த சில நிமிடங்களில், தீ லாரி முழுவதும் மளமளவென பரவி எரியத் தொடங்கியது. பேட்டரிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால், விண்ணை முட்டும் அளவுக்கு அடர்ந்த கரும்புகை வான் உயர எழும்பியது.

இதனால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளித்தது. புகைமூட்டம் காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, காவல்துறை சார்பில் உடனடியாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் லாரியில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மென்பொருள் உதிரிபாகங்கள் மற்றும் பேட்டரிகள் முற்றிலும் எரிந்து கருகின. நல்வாய்ப்பாக ஓட்டுநர் தமிழரசன் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேட்டரிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது அதிக வெப்பம் காரணமாக பேட்டரிகள் வெடித்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.